Wednesday, October 20, 2010

செதுக்காத சிற்பங்கள்’ : இயல்பும் - முரணும்



பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியதே சமுதாயம்.
இதில் காணப்படும் கருத்து .இம்முரண்பாடுகளைக் கட்டவிழ்க்கும் முயற்சியே கதையாக உருப்பெருகின்றன. ஒரு படைப்பாளனின் உள்ளத்தை நெருடிய செய்திகள் சமுதாயத்தில் பல மாற்றங்கள் உருவாவதற்கு அடித்தளமாய் அமைகின்றன.
க.ப.அறவாணன் அவர்களின் ‘செதுக்காத சிற்பங்கள்’ என்ற கதைத்தொகுப்பு சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்களை, நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது.
‘செதுக்காத சிற்பங்கள்’ என்னும் தலைப்பு பல்வேறு உட்பொருள்களைக் கொண்டுள்ளது. செதுக்காமல் சிற்பம் செய்ய இயலாது. செதுக்கினால் தான் சிற்பமாகும்;;;.ஆனால், இங்கு செதுக்காத சிற்பங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். சிற்பி எதை நினைத்துச் செதுக்கினானோ அதைத்தான் வடிவமாக உருப்பெற்று பார்ப்பவர் கண் முன் காட்சியளிக்கும். ஆனால், செதுக்காத சிற்பத்தினைக் காண்பவர் தங்கள் மன உணர்விற்குத் தகுந்தார் போல் கற்பனை செய்து கொள்ளலாம். ஆசிரியர் சிற்பத்தினை வடிவமைத்து, வாசகரையும் சிந்திக்கத் தூண்டுகிறார்.
இக்கதைத் தொகுப்பில் 29 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை, கதைக்கருவின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்;.
பொதுமை அடிப்படையிலானவை
1. கதை அமைப்பு முறை,
2. தலைப்புப் பொருத்தமும் முடிவும்.
கதைக்கருஅடிப்படையிலானவை

1. சமுதாய சிந்தனைகள்,
2. பெண் நிலைப்பாட்டுத்தன்மை,
3. வரலாற்றுப்புனைவுகள்


பொதுமை அடிப்படையிலானவை

1. கதை அமைப்பு முறை
யதார்த்தம் (4,8,9,2,3), சளிப்பு (1,5,6,7,10,11,15,16,17,18,19), வெறுப்பு (12,20,21,22), மகிழ்ச்சி (13,14,24,25,26) கற்பனை (27, 28, 29) என்பவற்றை மையமிட்டதாக கதைக்கருக்கள் அமைந்துள்ளன. கதையினைத் தொடக்கம் முதல் முடிவு வரை வளர்த்துச் செல்லும் விதம் தொய்வின்றித் தொடர்கிறது. கதைமாந்தர்களைப் பேச வைக்கும்முறை இயல்பாக உள்ளது. கதைமாந்தர்களைத் தேவையில்லாமல் புகுத்துதல் அல்லது பாதியிலேயே விட்டுவிடுதல் போன்ற தன்மைகள் இல்லை. தேவை ஏற்படின் கதாப்பாத்திரங்களுக்குப் பெயரிடுதலும், தேவை ஏற்படாத கதைகளில் பெயரிடாமல் செல்லும் போக்குகள் உள்ளன.
2.தலைப்புப் பொருத்தமும் முடிவும்
கதைக்கருக்களை மையமிட்ட தலைப்புகளும், பெரும்பான்மை அதற்குப் பொருத்தமான முடிவுகளும் அமைந்துள்ளன. நியாயமா? (1), என்றைக்குச் சுதந்திரம் எங்களுக்கு? (5), எம்புட்டுப் படிப்பு? (6), காரணம் கடவுளா? (7), ஏன் பிறந்தேன் இத்துயர் நாட்டினிலே? (16), ஜனநாயகத்தின் விலை ஜனங்களின் கண்ணீரா? (21), அடுக்குமா?,(22 ), சமநீதி! (22), என்ற தலைப்புக்களை மையமிட்ட கதைகளில் இச்சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், அதற்குத் தீர்வு காணமுடியாச்சூழல் நிகழ்வதையும் வேதனையோடு தலைப்புகளிலேயே பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டுச் சுவரின் சோக மரணம்(2);, வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும் (12);, ஒரு தமிழ் ஆப்பிரிக்கனின் அக சரிதம்(10), இன்னொரு சுனாமி! (20), அம்பத்தி ஆறாவது ஜனவரி 26 (19), போன்ற தலைப்புகளில் இச்சமூகத்தின் அவலநிலையைச் சுட்டிக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் ஒரே ரூபாய்! (3), சிவ புராணம் முடியவில்லை (13), அவன் குடிக்கவே மாட்டான் (14), பிச்சை புகினும் (23), கோடியே தேடி வந்தாலும்(24), காந்தி வாத்தியார்(25), போன்ற கதைகளில் நேர்மையான மனிதர்களின் பதிவுகள் தென்படுகின்றன. அந்த நாளும் வந்திடாதோ! (4 ), நட்பின் வலிமையைப் பற்றியது. கண்ணே! உன்னை மறப்பேனா? (8), பாசத்தின் நெகிழ்வாய் அமைந்துள்ளது. காலம் நம் கையில்(15), நாள் என் செயும்;? கோள் என் செயும்? (17) ஆகியன மூட நம்பிக்கைச் சாடல்களைப் பதிவாக்கியுள்ளன.
நான் ஃபார்வேடாம் (11), இடஒதுக்கீடு பற்றிய ஆசிரியரின் கருத்துப் பதிவு. காதல் கதையல்ல: காவியம் (27), அவனுக்கே பிச்சி ஆனாள் (28), மனிதனை மணக்க மாட்டேன்(29) ஆகியன புராணங்களின் புதுப் புனைவுகள். இக்கதைத் தொகுப்பில் அமைந்துள்ள 29 கதைகளுக்கும் தலைப்புகள் இயல்பாகவும், கதைக் கருவே தலைப்பாகவும் அமைந்துள்ளன.
பெரும்பான்மையான கதைகளில் முடிவுகள் பொது உண்மைச் சார்ந்ததாகவும், நான் ஃபார்வேடாம், வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும் போன்ற கதைகளின் முடிவுகள் வேறுபட்ட சிந்தனை உடையனவாகவும் உள்ளன.
கதைக்கரு அடிப்படையிலானவை
1.சமுதாயச் சிந்தனைகள்
சமுதாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் தன் உணர்வினை வெளிப்படுத்தும் வாயில்தான் படைப்பாற்றல். சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், அதனால், தான் அடைந்த உணர்வினையும் படைப்புக்களாக வெளிப்படுத்துகின்றனர்.
உயிர்களைக் கொல்லாமை (25), கைய+ட்டு வாங்காமை (13), கள்ளுண்ணாமை (14), வறுமையிலும் செம்மையான வாழ்க்கை (24) போன்ற நன்னெறிகளைக் காந்தியத்தின் வழி நின்று வளர்த்துச் செல்கிறார்.
சுயநலமற்றத் தொண்டறம் (1), கல்விக்கு நன் மதிப்பற்ற தன்மை (6), மூடநம்பிக்கையைத் தகர்த்தல் (15,16), நேர்மைக்குத் தண்டனை தரும் உலகம்(16), ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆகியும் குடியரசு அற்ற நிலை(19), உழைப்பினையே குறிவைத்து துரத்தும் வறுமையும், ஓய்வின்மையும்(18,22), உலக மயமாதல் வணிகத்திற்கு மட்டும், மனிதர்களுக்கு இல்லாதநிலை என்று சமுதாயச் சீர்கேடுகளுக்குச் சில இடங்களில் தீர்வுகாண நினைக்கும் மனப்போக்கு அமைந்துள்ளது.
எந்த உயிரையும் தன் உயிர் போல் பாவிக்கும் மனம் (8), நட்பு (4), மனித நேயம் (26) என்பவை இயல்பான பதிவுகளாக உள்ளன.
2.பெண்ணிய நிலைப்பாட்டுத்தன்மை
என்றைக்குச் சுதந்திரம் எங்களுக்கு(15), என்ற சிறுகதைகயில் வரதட்சணை கொடுமைதாளாமல் இறந்துபோன பெண்ணையும், அக்குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணையும், ஒருங்கே இணைக்கும் விதமும், ஒரு பெண்ணின் கொடுமையினை ஆண் விவரிக்கும் தன்மையும், ஆறு பக்கச் சிறுகதையினில் நாலே பத்தியில் சொல்லவந்த செய்தியினை நுணுக்கமாகவும், நெஞ்சில் தைக்கும் வண்ணமும் சொல்லும் விதமும் அருமையாக அமைந்துள்ளன.
பல சிறுகதைகளில் அமையும் பேச்சு வழக்குகளில் பெண்களைப் பெட்டை என்றும் பொட்டை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெட்டை என்ற சொல்லாடல் பேச்சு வழக்கில் மருவி பொட்டை ஆயிற்று. பொட்டை என்பது ஊனத்தைக் குறிப்பது. மேலும் பொட்டை என்பது ஆண்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக குறிப்பிடும் சொல்லாக வழக்கில் உள்ளது. பெண்ணியச்சிந்தனையில் மிகுந்த நாட்டமுள்ள கதாசிரியர் இச்சொல்லாடலைப் பயன் படுத்தியதன் நோக்கம் தெரியவில்லை.
3.வரலாற்றில் புதுப்புனைவு
காதல் கதையல்ல : காவியம்(27), அவனுக்கே பிச்சி ஆனாள்(28), மனிதனை மணக்க மாட்டேன்(29) என்ற மூன்றும் வரலாறு தொடர்பானவை. இளங்கோ, சுந்தரர், ஆண்டாள் இவர்களின் காதலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதும், வாசகர்களை வரலாறு நடைபெற்ற காலத்திற்கே இட்டுச் சென்ற விதமும், நடப்பு போன்ற தோற்றமும் மிகவும் அருமையாக அமைந்துள்ளன.

முரண்பாடுகள்
நான் ஃபார்வேடாம்(11), என்ற சிறுகதையில் இடஒதுக்கீட்டினால் வேலை கிடைக்காமல் போகும் ஏழை பிராமணக் குடும்பத்தின் மனநிலையைப் படம் பிடித்துள்ளார். வீட்டுக்காரரும், சின்ன வீட்டுக்காரரும்(12) என்ற சிறுகதையிலும் தன் மகனையும், மகளையும் ஐ.ஏ.எஸ், ஆக்கிட “ அரசு கொடுக்கிற சலுகை வேறு இருக்கிறது. படிக்கவும் இடம் கிடைக்கும். படிச்ச பிறகு வேலையிலும் இடம் கிடைக்கும். மாஜி மந்திரி இன்றைய நிலவரத்துக்குப் பத்துக் கோடிக்குச் சொந்தக் காரியாக இருந்தாலும், மிகமிகப் பின் தங்கியோர் பட்டியலில் நாம் இருக்கிறோம்” என்று சின்ன வீட்டுக்காரர் சொல்வது போல் கதை அமைக்கப் பட்டுள்ளன. இடஒதுக்கீடு என்பது இந்தச் சாதிய சமுதாயத்தின் அடிப்படைத் தேவை கருதியும், மக்கள் வாழும் தொகையின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டு, பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட உரிமை. இதனை மையமிட்டேதான் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிலும் உள் ஒதுக்கீடு கேட்க காரணம். அவ்வாறு இருக்க ஆசிரியர் சொல்ல வரும்கருத்து சமூகநீதித் தத்துவத்திற்கு முரணாய்த்தென்படுகிறது.
பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவாக இருக்கும் நிலையில் வீட்டுக்காரரும் சின்ன வீட்டுக்காரரும்(12) சிறுகதையில் அரசியலில் ஈடுபாடும் பெண்ணை ஒழுக்கமற்றவளாகச் சித்தரித்து இருப்பதுடன், அவளுக்கு வந்த எயிட்ஸ் நோய் வீட்டுக்காரருக்கும், சின்ன வீட்டுக்காரருக்கும் பரவி இருப்பதாக கதை அமைக்கும் போக்கும் கண்ணுக்குத் தெரியாத புள்ளியைப் ப+தக்கண்ணாடி வைத்து பார்ப்பது போல் உள்ளது.
நிறைவுரை
‘செதுக்காத சிற்பங்கள்’ சிறுகதைத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான கதைக்கருக்கள் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும், நேர்மையான மூடநம்பிக்கை அற்ற உலகினை உருவாக்கத்தலைப்படுவதாகவும் அமைந்துள்ளன.

‘செதுக்காத சிற்பங்கள்’
கதை எண்கள் (பக்க எண்கள்)
நியாயமா?....(31)
தமிழ்நாட்டுச் சுவரின் சோக மரணம்!....(35)
திருவள்ளுவர் ஒரே ரூபாய்!....(38)
அந்த நாளும் வந்திடாதோ!.... (45)
என்றைக்கு சுதந்திரம் எங்களுக்கு?....(55)
எம்புட்டுப் படிப்பு?....(61)
காரணம்;: கடவுளா?.... (64)
கண்ணே! உன்னை மறப்பேனா?...(70)
சில கணங்கள், சில குணங்கள்!....(75)
ஒரு தமிழ் ஆப்பிரிக்கனின் அக சரிதம்!... (82)
நான் ஃபார்வேடாம்….(90)
வீட்டுக்காரரும், சின்ன வீட்டுக் காரரும்…(96)
சிவ புராணம் முடியவில்லை!....(103)
அவன் குடிக்கவே மாட்டான்….(108)
காலம் நம் கையில்….(114)
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினிலே?....(122)
நாள் என் செயும்? கோள் என் செயும்?....(128)
சம நீதி!........ (141)
அம்பத்தி ஆறாவது ஜனவரி 26….(.145)
இன்னொரு சுனாமி!....(153)
ஜனநாயகத்தின் விலை ஜனங்களின் கண்ணீரா?...(159)
அடுக்குமா இது?....(165)
பிச்சைப் புகினும்….(172)
கோடியே தேடி வந்தாலும்….(176)
காந்தி வாத்தியார்… (180)
இப்படியும் ஒரு தமிழ்ப் பெண்…(186)
காதல் கதையல்ல: காவியம்..(193)
அவனுக்கே பிச்சி ஆனாள்…(202)
மனிதனை மணக்க மாட்டேன்..(210)


மு.சு.கண்மணி

No comments:

Post a Comment