Sunday, December 27, 2009

Saturday, December 26, 2009

சங்க இலக்கியத்தில்....

சங்க இலக்கியத்தில் மகளிரின் வணிக உத்தி

மு.சு.கண்மணி,

மனித சமுதாய வரலாற்றில், தாயாட்சி சமுதாயம் மறைந்து, தந்தையாட்சி சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்தே, பெண்ணென்ற பாலினத்தின் மீதான ஆளுமை தொடர்ந்து கொண்டு உள்ளது. சங்க காலச் சமுதாய மக்களிடத்தும் இத்தகைய ஆளுமைப் பண்பைக் காணமுடிகிறது.

தமிழின் முதல் நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் எம்மொழியிலும் இல்லாத மிகச்சிறந்த ஒரு இலக்கணக் கோட்பாடாக மனிதவாழ்வில் அகத்திற்கும், புறத்திற்கும் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் இலக்கண விதிகளில் ஆணிற்கு ஆளுமையையும், பெண்ணிற்கு அடங்குதலையும் தமிழச்; சமுதாயத்திற்கே உள்ள பண்பாகச் சுட்டப்பட்டுள்ளன. இப்பண்பானது ‘தொல்காப்பியர்’ என்ற தனிமனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என்பதும், காலந்தொட்டு நடைமுறையில் இருந்த பழக்கத்திற்கே ‘விதி’களை அமைத்துள்ளார் என்பதும், ‘கூறினார் புலவர்’, ‘என்பனார் புலவர்’, ‘மொழிப’ போன்ற வரிகளின் மூலம் அறிய வருகிறது.

தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியலில், ஆண்கள் மட்டும் தான் வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்று எந்தக் குறிப்பையும் தொல்காப்பியர் சுட்டவில்லை. சங்க இலக்கியங்;களான பத்துப்பாட்டிலிலும், எட்டுத்தொகையிலும் பெண்கள் வணிகத்தில் ஈடு பட்டதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

இதன் மூலம் சங்ககால மகளிர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவருகிறது. இருப்பினும் செல்வச்செழிப்பில் வாழ்ந்த பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. உணவு தயாரித்தலும், இனப்பெருக்கம் செய்தலுமே இவர்களின் பணியாகக் கருதப்பட்டன. பொருளாதார நிலையில் சற்றுப் பின் தங்கியிருந்த பெண்கள் வீட்டிலிருந்தும், பண்ட்;;மாற்று மற்றும் பொருளீட்டல், பொருட்டு வணிகத்தில் ஈடுபட்டதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகம் ஏற்றுமதி செய்த வாணிகப் பொருள்களின் பட்டியலில் அகில், அரிசி,ஆடைகள்,ஆரம்,இஞ்சி,இலவங்கம்,ஏலம்,கருங்காலி,மயில்,மிளகு,முத்து ஆகியன சிறப்பிடம் பெற்றிருந்தன. தமிழகக் கப்பல்கள் பொருளை விற்று பொன்னுடன் திரும்பி வருதலை கீழ்காணும் வரிகள் தெளிவு படுத்துகின்றன.

“பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடு ஆரநன்கு இழிதரும்
ஆடியல் பெருநாவாய் ”-(மதுரைக்காஞ்சி-81-83)

இவ்வாறு ஏற்றுமதி, இறக்குமதியில் தமிழகம் சிறப்புற்று இருந்திருந்தாலும்,
பெண்கள் கடல்கடந்து செல்லவில்லை. என்பதைத் தொல்காப்பியர் கீழ் வருமாறு சுட்டுகிறார்.
“முந்நீர் வழக்கம் மகடுஉவோடு இல்லை”
(தொல்.அகம்-37)

இச்செய்தியின் மூலம் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் சமூகத்தில் நிலவி இருந்ததை அறிய முடிகின்றது. சங்ககாலப் பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கு வறுமை ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.பாட்டும், தொகையுமாகிய சங்க நூல்களில் பெண்கள் வணிகத்தில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் பல இடங்களில் காணப்பட்டாலும், பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்களில் உள்ள செய்திக் குறிப்புகள் மகளிரின் வணிகச் சிறப்பினை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளதால் அப்பாடல்களின் செய்திக்குறிப்புகள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சங்ககால மகளிரும்-வணிகமும்

சங்க காலத்தில் பெண்கள் பல்வேறுபட்ட தொழிலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.உழவு, உணவுகாத்தல், ஆடைவெளுத்தல், ஏவல்செய்தல்,அறிவுரைகூரல்,குற்றேவல், அடிவருடதல், அரசனுக்கப்பணியாற்றல், குழந்தை வளர்த்தல், அரியல்(கள் அரித்தல்),ஆள்வோர்கலை, தேன், கிழங்கு, மீன், நெய், மீன்நெய், நறவு, மான்தசை, அவல், மோர், வெண்ணெய், கலி, கள், கரும்பு, பயறு, கெடிறு, வரால், பழையவெண்ணெய், வாளைமீன், உப்பு, முத்து ஆபரணம், சிறுகுடில், எருமை, கன்று போன்றவற்றை விற்பனை செய்ததற்கான குறிப்பு காணப்படுகின்றது.



கடை வைத்து வணிகம் செய்ததாக மதுரைக் காஞ்சி (621-622) -யில் குறிப்பு காணப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படும் வணிகத்தினைச் சிறப்போடும், மதிநுட்பத்தோடும் செய்ததைப் ‘பெரும்பாணாற்றுப்படை’ (163-168) செய்தியின் மூலம் அறியமுடிகின்றது.

ஆற்றுப்படை நூல்கள்

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களாக ஐந்து உள்ளன.

1.திருமுருகாற்றுப்படை
நக்கீரர் முருகனைப் பாடியது (317 அடி)
2.பொருநராற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார் கரிகால்வளவனைப்பாடியது
(248 அடி)
3. சிறுபாணாற்றுப்படை
நல்லூர் நத்தத்தனார் நல்லியக் கோடனைப்பாடியது
(269அடி)
4. பெரும்பாணாற்றுப்படை
உருத்திரங்கண்ணனார் ;இளந்திரையனைப்பாடியது
(500 அடி)
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை
பெருங்கௌசிகனார்; நன்னன்சேய்நன்னனைப்பாடியது
(583 அடி)

இந்த ஆற்றுப்படை நூல்கள் புறத்திணை இலக்கண அமைவுடன் அமைந்துள்ளன. இவ்வைந்து நூல்களில் திருமுருகாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படையில் மகளிர் வணிகம் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. பொருநராற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை,மலைபடுகடாம்(அ)கூத்தராற்றுப்படையில் மட்டுமே மகளிர் வணிகம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. துpருமுருகாற்றுப்படை தவிர ஏனைய ஆற்றுப்படைகளில் விறலியர், பாடினி, பாண்மகள் என குறிப்பிடப்படுவோர் தொழிலின்பொருட்டு ஊர்விட்டு ஊர்சென்று பாடல்பாடி பொருளீட்டும் பெண்களே.



ஆடல் பாடல்

தேன் விற்றல
;
கிழங்கு

மீன் நெய்

நறவு

மான் தசை

அவல்


வெண்ணெல்

கள்

கரும்பு

பயறு

வரால்.

வாளைமீன்

உப்பு


மீன்

புவிற்றல்

சிறுகுடில்விற்றல்

முத்து ஆபரணம்
கடை வைத்தல்

மோர் விற்றல்

நெல்
எருமை:கன்று



குடும்பத்துடன் சென்று பொருளீட்டல்

வுpறலியர் ஆடல் பாடல்களில் வல்லவர்களாக, வீரமிக்கவர்களாகவும் விளங்கினர்.இவர் பாடியப் பாடலுக்குப் கிடைக்கும் பரிசில்களே செல்வமாகக் கருதப்பட்டது. புறநாநூற்றில் பாரியின் புறம்புமலை பகைவர் வெல்வதற்கு எளிதன்று,விறலிக்கு எளிது(111:4)என்ற வரிகளிலிருந்து அவர்களின் சிறப்பை உணர்ந்துகொள்ள முடிகின்றது.போர்களப்பணியில் ஈடுபட்டு வீரர்களின் விழுப்புண்ணை ஆற்றுவதற்காகவும் பாடல்பாடியதை மலைபடுகடாம் எடுத்துரைக்கிறது.அப்பாடல் வரிகள் வருமாறு:

“நெடுவலி விழுப்புண் தணிமார்காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்”
(மலை.303-304)

ஆடலையும், பாடலையும், நாடகத்தையும் தொழிலாகக் கொண்டதை பெரும்பாணாற்றுப்படை ‘நாடகமகளிர் ஆடுகளத்தெடுத்த’ என்ற வரிகளின் மூலம் சுட்டுகிறது.

பண்டமாற்று
தேன், கிழங்கு, மீன் நெய், நறவு, மான்தசை, அவல் போன்ற பொருட்களை மகளிர் விற்றதாகப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது. அவ்வரிகள் வருமாறு:

“தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறவு மறுகவும்
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் (பொரு-ஆற் 213-220)

தேன், நெய், கிழங்கிற்குப் பண்ட மாற்றாய் அல்லது விலையாய் மீன்நெய்யையும், நறவையும் பெற்றுக் கொள்வார்கள.; இனிமை பொருந்திய கரும்பிற்கும், அவலிற்கும் விலையாக மானின் தசையையும், கள்ளையும் பெறுவர் என்று ‘பண்ட மாற்று’ என்னும் வணிக உத்தியைப் பயன்படுத்தியமை இங்கு; சுட்டப்படுகின்றன.

வண்டியினை இயக்கும் திறன்

பெரும்பாணாற்றுப்படையில் உமணப் பெண்டிர் வணிகத்தின் பொருட்டு, வண்டியை ஒட்டிச் செல்லும் செய்திக்குறிப்பு காணப்படுகிறது.
அதில் தினைப்புலத்தைக் காவல் காப்பதற்காகக் கட்டப்பட்ட சிறுவீடு போன்ற பரண்மேல் கோழிக்கூடு, சிறிய உரல், காடிப்பானை போன்றவைகள் நன்கு கட்டப்பட்டுள்ள வண்டியின் முனைப்பகுதியில் தன் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு, உமணப் பெண்டிர் எருது கட்டப்பட்ட வண்டியினைத் திறம்படச்; செலுத்துகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அப்பாடல் வரிகள் வருமாறு:

“வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேர்க்கும் கூடுடைப் புதவின்
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
வீசி வீங்கு இன் இயம் கடும்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணிதோள்”
(பெரும்.ஆற்51-60)

இச்செய்தியின் மூலம் வணிகத்தில் ஈடுபட்ட பெண்கள் ஊர் விட்டு ஊர் சென்றுள்ளனர் என்பதும், எறுமைகள் பூட்டிய வண்டிகளையும் இயக்கத் தெரிந்திருப்பதையும்,தங்களுக்கு வேண்டிய் பொருட்களையும்,; உடமைகளையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்பதையம் இப்பாடலின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

அழகியல் மேல் நாட்டமற்ற வணிகப் பெருக்கம்

பெரும்பாணாற்றுப்படையில் வரும் இன்னொரு செய்தியில் ஆயர் குலப்பெண்கள் மூலப் பொருள் ஒன்றினைக் கொண்டு பல வணிகமுறையினைக் கையாண்டு தங்கள் பொருளினை விற்றனர் என்ற குறிப்பு காணப்படுகிறது.



அதில் விடியல் பொழுதில் நல் தயிரினை மத்தினைக் கொண்டு கடைந்து, வெண்ணெய் தனியாகவும், மோர் தனியாகவும் பிரித்தெடுத்து;, மோரினை நெல்லிற்குப் பண்டமாற்றாகக் கொடுக்கிறார் என்றும் வெண்ணெய் உருக்கி நெய்யெடுத்து அதனை விலைக்கு விற்று, அந்தப் பொருளுக்கு பொன்னை வாங்காமல் எருமையை வாங்கினாள் என்ற குறிப்பும் காணப்படுகின்றது. அப்பாடல் வரி வருமாறு:

“அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளார்.
எருமை நல் ஆன் கரு நாடு பெறூஉம்”
(பெரும் ஆற்-163-165)

இச்செய்தியின் மூலம் எப்பொருளை எப்படி விற்க வேண்டும் என்ற வணிக உத்தியினை ஆயர்குலப் பெண்கள் அறிந்திருந்ததையும், மூலப்பொருள் தயிரை அப்படியே விற்றால் மிகுந்த இலாபம் கிட்டாது என்பதை அறிந்து அதனை இருவேறுபட்ட விற்பனைப் பொருளாக்கி விற்ற வணிகஉத்தியினை இப்பெண்கள் அறிந்திருந்தமைப் புலப்படுகிறது.

மேலும் பெண்களென்றால் நகையின் மீது அதிக ஆர்வம்; கொண்டவர்கள் என்ற ஆணாளுமைக் கருத்தாக்கத்தினை மாற்றியமைக்கும் வகையில் வணிகத்தில் பெற்ற பணத்திற்குப் பொன்னை வாங்காமல், வணிகம் பெருகுவதற்காக மேலும் ஒரு எருமையினை வாங்கினாள் என்ற செய்திசங்ககால மகளிர் வணிகத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டினை அறிய உதவுவதுடன், அவ்வணிகம் பெருகுவதற்கான உத்தியினையும் பெண்கள் அறிந்திருந்ததையும் தெளிவுபடுத்துகிறது.

கள் விற்கும் மகளிர்
மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படையில் நெல்லினைக் கொண்ட வயலின் அருகே உள்ள நிலத்தில் பெண்கள் தெளிந்த கள்ளினை விற்ற செய்திக் குறிப்பு காணப்படுகின்றது. அப்பாடல் வரிகள் வருமாறு:

“பகன்றைக் கண்ணிப் பிழையர் மகளிர்
நெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ
வளம் செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித்தேறல்
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவிர்”
(மலை-459-464)

இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடு சங்ககாலச் சமுதாயத்தில் இல்லை என்பது அறியவருகின்றது.

ஆய்வு முடிவு
பெண்ணென்பவள் கட்டுப்பாடுகளுக்குள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பது வரலாற்றில் புறந்தள்ளப்படவேண்டிய உண்மை. இதன் தொடர்ச்சிதான் தொல்காப்பியத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லுதல் கூடாது, மடலேறுதல் கூடாது, தனது காதலை வெளிப்படுத்துதல் கூடாது என்று பல்வேறு தடைகளை; பெண்களுக்கானச் சட்டவிதிகளாக இருந்திருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சமூகத்தடை இருந்த காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டபெண்களுக்கு சமூகத்தடை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஒருவரிடம் வேலைசெய்து பொருளீட்டல் என்பது மிகவும் எளிமையானது. ஆனால் தானே வணிகத்தில் ஈடுபட்டு அதனை சிறந்த முறையில் நடத்தி வெற்றி பெறுவதுடன், அதனை மென்மேலும் வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அறிவுக் கூர்மையுடன் செயல்பட்டிருக்கின்றனர் என்பது அனைவரும் கற்றக்கொள்ளவேண்டிய உத்தியாகும்.


•• ••••••••••••••••