Wednesday, October 20, 2010

மாதர்மித்திரியில் அழகு


19-ஆம் நூற்றாண்டிலேயே பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், பெண்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும் பெண்களுக்கென்றே இதழ்கள் பல வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்த முதல் மகளிர் இதழ் அமிர்தவசனி. இவ்விதழ் 1860ஆம் ஆண்டு வார இதழாகத் திருச்சியிலிருந்து வெளியானது. இதன் ஆசிரியர் திரு. அமிர்தபாபு. இதன் தொடர்ச்சியாக 1883-இல் சுகுண போதினியும், 1887-இல் மாதர்மித்திரி, மகாராணி என்ற இரு இதழ்களும், 1891-இல் பெண்மதிபோதினியும் 1899-இல் மாதர் மனோரஞ்சனியும் பெண்களுக்கான இதழ்களாக வெளிவந்தன.

இவற்றுள் சில இதழ்களே தற்பொழுது காணக்கிடைக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாகக் கிடைக்கவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட இதழ்களுள் 1887-இல் வெளியான மாதர்மித்திரியின் சில இதழ்கள் இன்று கிடைக்கின்றன.

இதழியல் தொடர்பான ஆய்வேடுகளும், கட்டுரைகளும் பலவாக வெளிவந்தாலும், ‘மாதர்மித்திரி’ பற்றிய முதன்மையான ஆய்வு இதுவேயாகும். மாதர் மித்திரி யென்றால் பெண்களின் தோழி என்று பொருள். இதன் அடிப்படையில் 1887-ஆம் ஆண்டு ஜுலை மாதம் மாத இதழாக வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் திருமதி. ஏ. ரூடிஸில். சென்னை வேப்பேரி மெதடிஸ்ட் எப்பிஸ் கோப்பல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட இவ்விதழின் அளவு 24 ஷ் 18 செ.மீ. பன்னிரண்டு பக்கங்கள் கொண்ட இவ்விதழின் விலை இரண்டு அணா. மொத்தம் 500 படிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் இதழ் ‘பிரிட்டீசு நூலகத்தில்’ உள்ளதாக அ.மா. சாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இம்மாதர்மித்திரியின் 1887-ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 1888-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான ஓராண்டு (12) இதழ்கள் இன்று கிடைக்கவில்லை. ஆனால் 1888-ஆம் ஆண்டு ஜுலை மாதம் துவங்கி 1889-ஆம் ஆண்டு ஜுன் வரையிலாக ஓராண்டு கால இதழ்கள் கிடைக்கின்றன. அதன் பின்வரும் பன்னிரண்டு ஆண்டுகளின் இதழ்கள் கிடைக்கவில்லை. 1901-ஆம் ஆண்டு வெளியான சில இதழ்கள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கப்பெறும் இதழ்களில் 1888 முதல் 1889 வரை வெளியான ஓர் ஆண்டுகால (12) இதழ்களில் மட்டும்தான் பெண்ணியக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் கிடைக்கும் 1901-ஆம் ஆண்டு முதல் வெளியான இதழ்கள் முற்றிலும் கிறித்துவ மதக்கோட்பாடுகளைக் கூறும் இதழாக அமைந்துள்ளது. இறையியல் இதழாக மாறியதற்கான காரணத்தையும் அறியமுடியவில்லை. அதனால் பெண்ணியக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓராண்டு கால இதழ்களே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இதழ்களில் அமைந்துள்ள கட்டுரைகளில் ‘அழகு’ பற்றிய புதுமையான கருத்துக்கள் பல அமைந்துள்ளன. கட்டுரை ஆசிரியர்கள் குறிப்பிடும் அழகியல் கோட்பாடுகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
மு.சு.கண்மணி

No comments:

Post a Comment